மன்னீஸ்வரர் கோவிலில் மாணவர்கள் தூய்மை பணி
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மை பணி செய்தனர். மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆண்டு கும்பாபிஷேக பணி நடக்க உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் துாய்மை பணி நடந்தது. கல்லுாரியின் கட்டடவியல் துறை தலைவர் சங்கர சுப்ரமணியன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் கோவில் வளாகத்தை முழுமையாக கழுவினர். தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டன. ஒட்டடை அடிக்கப்பட்டது. இப்பணியில் என்.எஸ்.எஸ். அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். துாய்மை பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியருக்கு, பேரூராட்சி சார்பில், தலைவர் ராணி, அன்னுார் வரலாறை கூறும் மன்னுபுகழ் மன்னியூர் என்னும் புத்தகங்களை வழங்கினார்.