உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீமேஸ்வரர் கோவில் திருப்பணி பாதியில் நிற்பதால் திருவாசகம் ஓதல்

பீமேஸ்வரர் கோவில் திருப்பணி பாதியில் நிற்பதால் திருவாசகம் ஓதல்

மோகனூர்: பாதியில் நிறுத்தப்பட்ட மோகனூர் பீமேஸ்வரர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க வேண்டி, சிவனடியார்கள், திருவாசகம் ஓதினர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், பிரசித்தி பெற்ற பீமேஸ்வரர் கோவில் உள்ளது. நாற்புறமும் மணலால் சூழப்பட்டதால், மணப்பள்ளி என்ற பெயர் பெற்ற கிராமத்தில், காவிரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்தது என்றும், கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள், ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்தவை என்றும் கூறுகின்றனர்.இத்தகைய பீமேஸ்வரர் கோவில், காலப்போக்கில் சிதிலம் அடைந்து, எந்நேரத்திலும் கீழே விழும் நிலையை அடைந்துள்ளது. கருவறை சுவர்களில் விரிசல் விழுந்து, வெளிப்புறம் கற்கள் சரிந்து விழுகின்றன. இந்நிலையில், கடந்த, 2006ல் திருப்பணி துவங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பாதியில் நின்றது. தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின், 13வது நிதி ஆணையத்தின் நிதிஉதவி திட்டம் மூலம், 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த, 2013, ஜனவரி, 17ல் திருப்பணி துவங்கியது. கோபுரப்பணிகள் பெருமளவு முடிக்கப்பட்ட நிலையில், சிறு சிறு வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதனால், திருப்பணி முழுமையாக நிறைவேறாமல் நின்றது. நிறுத்தப்பட்ட பணி தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என, மோகனூர், மணப்பள்ளி, பொத்தனூர் மற்றும் கரூர் பகுதியை சேர்ந்த சிவனடியார்கள், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 9 மணி முதல், மாலை, 5 மணி வரை, திருவாசகம் ஓதி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !