உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் ஆக.,2ல் சங்கு தீர்த்த புஷ்கர மேளா!

திருக்கழுக்குன்றத்தில் ஆக.,2ல் சங்கு தீர்த்த புஷ்கர மேளா!

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சங்குதீர்த்த குளம், புனித தீர்த்தமாக விளங்குகிறது. குருபகவான்  கன்னி ராசிக்கு பெயர்ந்த நாளில், பல்வேறு நதிகள் சங்குதீர்த்த குளத்தில்  புனித நீராடி புனிதம் பெற்றதாக ஐதீகம். எனவே, கன்னி ராசியின் பரிகார தலமாக,  இத்தலம் சிறப்பு பெற்றது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை,  குருபகவான் கன்னிராசிக்கு பெயர்ச்சியாகும் நாளில், சங்குதீர்த்த குளத்தில்  புஷ்கர மேளா, அன்றிரவு லட்சதீப விழ, நடத்தப்படுகிறது. தற்போது, அடுத்த  மாதம், 2ம் தேதி, இவ்விழா நடைபெற உள்ளது; அன்று லட்சக்கணக்கான பக்தர்கள்  கூடுவர்.

திருக்கழுக்குன்றம், சங்கு தீர்த்த புஷ்கரமேளா மற்றும் லட்சதீப விழாவிற்காக, பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விழா சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, பல்வேறு துறையினருடன், கடந்த, 6ம் தேதி ஆலோசித்தார். அதைத்தொடர்ந்து, முக்கிய துறைகளின் பணிகள் அட்டவணைப்படுத்தப்பட்டு, அவற்றை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணி உத்தரவு விபரம்:

பேரூராட்சிகள் உதவி இயக்குனர்:

* தற்போது துவங்கி, விழா முடிந்த பிறகு இரு நாட்கள் வரை, தினமும் குப்பை அகற்றவேண்டும்
* எட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, 16 இடங்களில் புதிதாக குடிநீர்
வழங்கவேண்டும்; அதில் அனுமதிக்கப்பட்ட அளவு, ‘குளோரின்’ அவசியம்
* மொத்தம், 20 இடங்களில், தற்காலிக கழிப்பறை அமைக்க வேண்டும்; தற்காலிக குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். குளத்தைச் சுற்றி, ஐந்து இடங்களில், பெண்கள் உடை மாற்றும் அறை அமைக்கவேண்டும்
* குளம் மற்றும் கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; சாலைகளை சீரமைக்கவேண்டும்; குளம், கோவில், மலைவலம் ஆகியவற்றின் பாதைகளில், தெருவிளக்குகளை, எல்.இ.டி., க்களாக மாற்றவேண்டும்
* ‘பிளீச்சிங்’ பவுடர், இதர துாய்மைப்பொருட்களை, போதிய அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும்
* தண்ணீர் பாக்கெட் விற்பனையை, உடனடியாக தடை செய்யவேண்டும்.

இணை இயக்குனர், சுகாதாரத்துறை:

* குளத்தைச் சுற்றி, மூன்று இடங்களில், சிறப்பு முகாம்கள் அமைக்கவேண்டும்
* செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை, எந்த வித அவசர காலத்தையும் சந்திக்க முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்க வேண்டும்
* 20 தற்காலிக மருத்துவ முகாம்கள், 12 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைத்து, கண்காணிக்க வேண்டும்
* குளம் அருகில் இரண்டு, நகர முக்கிய பாதைகளில், நான்கு, ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக இருக்கவேண்டும்
* அவசர தேவைக்கு, மருந்துகள், மருத்துவ பணியாளர்கள் தயாராக இருக்கவேண்டும்; திருக்கழுக்குன்றம், அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும், மருத்துவர்கள் பணியில் இருக்க உத்தரவிடவேண்டும்
* இங்குள்ள ஆறு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில், ‘குளோரின்’ சரியான அளவில் கலக்கப்பட்டுள்ளதா என, கண்காணிக்கவேண்டும்.

கண்காணிப்பாளர், காவல்துறை: விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு திட்டம் வகுத்து செயல்படுத்தவேண்டும்; விழா நாளில், தேவையான காவலர்களை, பணியில் ஈடுபடுத்தவேண்டும்; குறிப்பிட்ட இடைவெளியில் என, 30 கண்காணிப்பு கேமரா, 10 தற்காலிக காவல் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசித்து, தற்காலிக பேருந்து நிறுத்தம், கார், இருசக்கர வாகனங்களுக்கு, தனித்தனி நிறுத்துமிடம் அமைக்கவேண்டும்.

கோட்டாட்சியர், செங்கல்பட்டு:
அனைத்து துறை பணிகள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, பணி முன்னேற்றத்தை ஆய்வுசெய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அறிக்கை அளிக்கவேண்டும்.

செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு),பொதுப்பணித்துறை: குளம், கோவில் ஆகிய இடங்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்படும் தடுப்புகளின் உறுதித்தன்மைக்கு சான்றளிக்க வேண்டும்; இத்துறை ஆய்வுமாளிகையை புதுப்பிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !