உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மலைக்கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள் செல்ல தடை!

திருத்தணி மலைக்கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள் செல்ல தடை!

திருத்தணி: திருத்தணி  முருகன் மலைக்கோவிலுக்கு, வரும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில்,  இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது’ என,  ஆட்சியர் நேற்று தெரிவித்தார். திருத்தணி  முருகன் கோவிலில், வரும் 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை,  ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.  விழாவிற்கு  முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை  அதிகாரிகளுடன்,  ஆட்சியர் சுந்தரவல்லி, நேற்று திருத்தணியில்  ஆலோசனை நடத்தினார். ஆட்சியர் பேசியதாவது:  “ஆடிக்கிருத்திகை, தெப்ப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளும்  சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளன. மருத்துவ முகாம்கள்,  பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

குளக்கரையில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக, தடுப்பு வேலிகள்  அமைக்கப்பட்டு உள்ளன. இருசக்கர வாகனங்கள், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில்,  மலைக்கோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. அதே  போல், தெப்பலில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ஏறுவதற்கும் தடை  விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆட்சியர் தற்காலிக பேருந்து நிலையங்கள்,  நல்லாங்குளம், சரவணபொய்கை குளம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு  மேற்கொண்டார். கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி., சாம்சன்,  திருத்தணி  எம்.எல்.ஏ., நரசிம்மன், வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், திருத்தணி  நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், இணை ஆணையர் தனபாலன் உட்பட, அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !