வேதத்தை காப்பாற்றினால், நம்மை வேதம் காப்பாற்றும்!
சென்னை : வேதத்தை காப்பாற்றினால், வேதம், நம்மை காப்பாற்றும், என, உபன்யாசகர் அனந்த பத்மாச்சாரியார் கூறினார். சென்னை, தி.நகரில், ஓம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், மூன்று நாட்கள் நடைபெறும், வேதம் கற்பவர்களுக்கான வேத போட்டிகள், நேற்று துவங்கின. எட்டாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை, உபன்யாசகர்கள் அனந்த பத்மாச்சாரியார், நொச்சூர் வெங்கட்ராமன், டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் நாராயணன், டாக்டர் பாலாஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். போட்டியில், வேதம் ஓதுதல், வேத பாராயணம், சிறப்புரை, தனித்திறன் போட்டி, சமஸ்கிருத நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
464 பேர் பங்கேற்பு : டிரஸ்ட் உறுப்பினர் நாராயணன் பேசியதாவது: இந்த அறக்கட்டளை சார்பில், முதலாமாண்டு போட்டி நடந்தபோது, 32 பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்தாண்டு, 464 பேர் பங்கேற்கின்றனர். வேத பாடசாலைகளும், வேதம் கற்பவர்களும் குறைந்து வரும் இவ்வேளையில், வேதம் படிப்பவர்களையாவது நாம் காப்பாற்ற வேண்டும். இந்தாண்டு தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மட்டுமல்லாது, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், மாணவர்கள் வந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
உபன்யாசகர் நொச்சூர் வெங்கட்ராமன் பேசுகையில், வேதம்தான் இறைவன்; வேதம்தான் தர்மம். வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மை காப்பாற்றும். வேதத்தை படிக்கும் குழந்தைகள், கடவுளுக்கு சமம். வேதம் என்பது வடமொழி சொல் அல்ல. அவ்வையார் கூட, ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என, வேதத்தின் சிறப்பு பற்றி கூறியுள்ளார். இறைவனின் மற்றொரு ரூபமான சப்த பிரம்மத்திற்காக, அருளப்பட்டவர்களே பிராமணர்கள். அவர்கள், தங்களது கடமையான வேதத்தை ஒலிக்கச் செய்வது, பரம பாக்கியமாகும், என்றார்.
உபன்யாசகர் அனந்த பத்மாச்சாரியார் பேசியதாவது: நாம், வேதபாட சாலைகளுக்கும், வேதம் கற்பவர்களுக்கும் நன்கொடையாக பணத்தை வாரி இறைக்கலாம். ஆனால், நம் குழந்தைகளை வேதம் படிக்க அனுப்புகிறோமா; வேதம் படித்தவர்களுக்கு பெண் கொடுக்கிறோமா? இந்த நிலை மாற வேண்டும். வேதத்தை ஓதுபவர்களை வாழ வைப்பது மட்டுமே, நம் வேலையல்ல. நம் குழந்தைகளையும் வேதம் படிக்க வைக்க வேண்டும். இன்றைக்கு ஐ.டி., இன்ஜினியரிங் என, வேலைக்கான உத்தரவாதத்தை தேடி அலைகிறோம். 1.56 லட்சம் இன்ஜினியரிங், சீட் ஆள் இல்லாமல் உள்ளன.
நெருப்புடா மாயை! : ஒரு சில நிறுவனங்கள், பிராமணர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் தருகின்றன. அதுபோல், வேதம் படித்தவர்களுக்கும் தர வேண்டும். வேதத்தை நாம் எப்படி புரிந்து கொண்டு ஒலிக்கிறோமா, அப்படியே வேதம் நம்மை காக்கும். இன்று, நாங்கள் எல்லாம் ஏதாவது, ஒரு சந்தேகம் என்றால், கேட்க யாரும் இல்லை. அந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. இன்று நெருப்புடா... ஒதுங்குடா... என, கூட்டம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற மாயையிலிருந்து நாம் விடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.