மாமல்லபுரம் சப்த கன்னியர் கோவிலில் ஆடி உற்சவம்
மாமல்லபுரம்:மாமல்லபுரம், சப்த கன்னியம்மன் கோவிலில், ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாமல்லபுரம், அண்ணாநகரில், கிராம கோவிலான சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. துவக்கத்தில் திறந்தவெளியில் வீற்றிருந்த கன்னியருக்கு, பக்தர்கள் சிலை மற்றும் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். தற்போது முதன்முதலாக, ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம், கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, பக்தர்கள், நேற்று காலை, 7:30 மணிக்கு, கோவிலில் இருந்து, மேளதாள முழக்கத்துடன் கடற்கரை சென்று, கடலில் புனித நீராடினர். அதை தொடர்ந்து, கடல் நீர் நிரப்பப்பட்ட கரகத்தில், கடலிலிருந்து சப்த கன்னியரை எழுந்தருள செய்து, 10:30 மணிக்கு கோவிலை அடைந்தனர். கன்னியரை மலர்களால் அலங்கரித்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். உற்சவம், பக்தர்கள் நலன் குறித்து, அருள்வாக்கு கேட்டு, கன்னியருக்கு கஞ்சி, கூழ் ஆகியவை படைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ்வார்த்து, இரவு அன்னதானம் வழங்கினர்.