சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் திருமண மண்டபம் திறப்பது எப்போது?
அரூர்: மொரப்பூரில் மூடிக்கிடக்கும் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் திருமண மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் பிரசித்தி பெற்ற சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோவிலுக்கு, ஞாயிற்றுக்கிழமை நாட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், மொரப்பூர்-சிந்தல்பாடி சாலையில், சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பின்னும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் திருமண மண்டபம் திறக்கப்பட்டால், மொரப்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் அங்கு நடத்த மிகவும் உதவியாக இருக்கும். மேலும், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே, இந்த திருமண மண்டபத்தை திறக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.