சிவன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம் ஆவுடையார்கோவில். இவ்வூரை திருப்பெருந்துறை என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுகிறார். மதுரை அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த இவர், குரு ஒருவர் சீடர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்டார். பின் மாணிக்கவாசகரும் அவரிடம் செல்ல, அவருக்கும் அந்த குரு உபதேசம் செய்தார். பின் அவரைக் காணவில்லை. சிவனே குருவாக வந்து தனக்கு உபதேசித்ததை உணர்ந்தார். எனவே இங்குள்ள குருவை சிவ குரு’ என்பர். இங்குள்ள மூலவர் லிங்க வடிவமாக இல்லாமல் உருவமற்ற நிலையில் (அருவம்) காட்சி தருகிறார். இவருக்கு ஆத்மநாதர்’ என்று பெயர். சிவன் குருவாக இருந்து உபதேசித்ததால், இந்தக் கோவில் தட்சிணாமூர்த்திக்குரிய திசையான தெற்கு நோக்கி இருக்கிறது. ஆத்மநாதர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள குருந்த மரத்தடியில், சிவன், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்யும் சிற்பம் உள்ளது.