பராமரிப்பின்றி சிதிலமடையும் நஞ்சுண்டீஸ்வரர் கோவில்!
உத்திரமேரூர்: சீதாவரத்தில், பல ஆண்டுகளுக்கு முன் இடிந்த நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சீதாவரம் கிராமத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 300 ஆண்டுகள் பழமையான, நஞ்சுண்டீஸ்வரர் கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்தன. இடிந்த பகுதிகளின் கற்கள் மற்றும் துாண்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீட்டு பயன்பாடுகளுக்கு எடுத்து சென்று விட்டனர். தற்போது, இக்கோவிலில் மூலவர் உள்ள கருவறை மற்றும் தட்சணாமூர்த்தி ஆலயம் மட்டுமே காணப்படுகிறது. மேலும், கோவிலுக்குள் இருந்த சுவாமி சிலைகள் இடிபாடுகளில் சிக்கி கோவிலை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. மூலவர் உள்ள கட்டட பகுதியும் பழுதடைந்து, கட்டடத்தின் மேற் பகுதியில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனால், மீதமுள்ள இக்கோவில் கட்டடமும் விரைவில் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழமையான இக்கோவிலை, பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொண்டு, கோவிலை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.