உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை இன்று துவக்கம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை இன்று துவக்கம்

அம்மாபேட்டை: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. சேலத்தில், ஆடி மாதத்தில், 22 நாள், கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் ஆடிப்பண்டிகை பிரசித்தி பெற்றது. ஆடி மாத முதல் செவ்வாயில் துவங்கி, கடைசி செவ்வாயில், நிகழ்ச்சி முடியும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பண்டிகை, இன்று துவங்குகிறது. விழாவின் துவக்கமாக, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி, இரவு, 8 மணிக்கு கோவில் வளாகத்தில் நடக்கிறது. பின், அங்கிருந்து, எட்டுப்பட்டி முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களுக்கு பூக்கள் எடுத்துச்சென்று, பூச்சாட்டு விழா நடக்கும். குறிப்பாக, அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பட்டைகோவில் சின்னமாரியம்மன், பொன்னமாபேட்டை மாரியம்மன், காமராஜர் நகர் மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், பாவடி மாரியம்மன் உள்ளிட்ட, 72 கோவில்களில், இன்று இரவு, விழா நடக்கும். அதையொட்டி, அதிகாலை, 4 மணி முதல் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு விசேஷ பூஜை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !