பக்தர்களின் வீடுதேடி வந்து பச்சியம்மன் சுவாமி பூஜை
நாமகிரிப்பேட்டை: பக்தர்களின் வீடுகளை தேடி வந்து, காக்காவேரியில் பச்சியம்மன் சுவாமி வரம் தந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம் காக்காவேரி அடுத்த பூசாரிபாளையத்தில் பச்சியம்மன் கோவில் விழா, ஆடி, 28ம் தேதி நடப்பது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. பொங்கல் விழா வரும், 12ம் தேதி நடக்கவுள்ளது. விழா தொடங்கியதில் இருந்து, பச்சியம்மன் சிலையை விழாக்குழுவினர் ஊர், ஊராக தூக்கிசெல்கின்றனர். பச்சியம்மனை குலதெய்வமாக வழிபடுவோர் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடும்பத்தினருக்கு வரம் தருவதாக நம்பிக்கை. சுவாமி வந்ததும், வீட்டு வாசலில் வைத்து, தண்ணீர் ஊற்றி, தேங்காய், பழம், பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தீபாராதனைக்கு பிறகு, மேளம் அடித்து, சிலம்பொலியுடன் இருவர் நாட்டுப்புற பாடலை பாடி, பச்சியம்மனை வழிபடுகின்றனர். காக்காவேரி, வெங்காயபாளையம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பச்சியம்மனை வழிபடுவோர் வீடுகளுக்கே நேரடியாக பச்சியம்மன் சென்று வரம் தரும் இந்த சம்பவத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆடி மாதத்தில் காத்திருக்கின்றனர். விழாக்குழுவினரும் 10க்கும் மேற்பட்டோர் சுவாமி சிலையுடன் நடந்தே சென்று, இந்த நம்பிக்கையை நிறைவேற்றி வருகின்றனர்.