உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: மலையில் குவிந்த பக்தர்கள்!

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: மலையில் குவிந்த பக்தர்கள்!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின் முக்கிய தினமான அமாவாசை வழிபாடு நடைபெற்றது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்தபடி உள்ளனர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றானது சதுரகிரி மலை. புராணகாலங்களில் வாழ்ந்த 18 சித்தர்களும் இங்கு வாழ்ந்து அடைக்கலமான மலை என்பதால் ‘சித்தர்மலை’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்கு வாழ்ந்த 18 சித்தர்களுக்கும் இறைவன் காட்சி கொடுத்ததால் இம்மலையில் காணும் இடமெல்லாம் சிவ வடிவமாக காட்சியளிக்கும். இதனால் பக்தர்கள் இதனை ‘பூலோக கயிலை’ எனவும் அழைக்கின்றனர். பல்வேறு சிறப்பு பெற்ற இம்மலையில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் மலையில் திரள்வார்கள்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்க சுவாமி கோயில்களில் மூலவர்களுக்கும், மூலவர்களுக்கு எதிரே எழுந்தருளிய நந்தீஸ்வரருக்கும் 18 வகை அபிஷேகங்களுடன் பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று சிவராத்திரி வழிபாடு நடந்தது. இரவு முழுவதும் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் மலையில் திரண்டு பூஜைகளில் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்களுடன் சங்கொலி பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக மூலஸ்தானம் திறக்கப்பட்டது.  ஆடி அமாவாசையுடன் குருப்பெயர்ச்சி தினமும், ஆடி 18ம் பெருக்கு தினமும் ஒருசேர வருவதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !