ஒரே நாளில் மூன்று விசேஷம் வந்தது கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரளுது
திருப்பூர்: இன்று ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குரு பெயர்ச்சி என, மூன்று விசேஷங்களும், ஒரே நாளில் வருகிறது. தட்சணாயன புண்ணிய காலத்தில், துவக்க மாதமான ஆடி மாதத்தில் வரும், ஆடிப்பெருக்கு, அமாவாசை, கிருத்திகை, வெள்ளிக்கிழமைகள், சிறப்பு நாட்கள் என்பதால், அனைத்து கோவில்களி லும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி மாதம் 18ம் நாளான இன்று ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குரு பெயர்ச்சியும், ஒரே நாளில் இணைந்து வந்துள்ளது கூடுதல் விசேஷம்.
ஆடிப்பெருக்கு: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், ஆடி பெருக்கு தினமான இன்று, நதிக்கரையோர அம்மன் கோவில்களில், திரு மணமாகாத கன்னி பெண்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, நல்ல கணவன் அமைய வேண்டிகொள்வர். திருமணமான பெண்கள், தாலி மாற்றி புது தாலி கட்டிக்கொள்வது விசேஷம். ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆடி 18ம் தேதியான இன்று, விவசாயிகள் தங்களது விவசாய பணி துவக்குவதும் சிறப்பு.
ஆடி அமாவாசை: ஆடி அமாவாசையன்று, தங்களது முன்னோர்களுக்கு, தர்ப்பனம் செய்து வழிபடுவது, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில், இறந்த முன்னோர்களுக்கு பிதுர்கடன் செய்து, அவர்களது ஆசியை பெறும் நாளாக, ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது. சிவாலய தரிசனம் செய்து, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்துவிட்டு, அன்ன தானம் செய்வது பெரும் புண்ணியத்தை தருகிறது.
குரு பெயர்ச்சி: ஆண்டுக்கு ஒருமுறை, குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு செல்வது குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த மாற்றத்தால், ராசிகளுக்கு ஏற்ப பலன்கள் ஏற்படுவதால், குரு பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகள், பாதிப்புக்குரிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யப்படுவதால், பக்தர்கள் குரு பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இன்று, காலை 9:30 மணியளவில், சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியில் இருந்து குரு, கன்னி ராசிக்கு, பிரவேசிக்கிறார். இதனால், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள், அதிக நன்மைகளை பெறுகிறது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் ராசிகள் பாதிப்பான பலன்களை கொண்டிருப்பதால், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாக உள்ளது. திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நடராஜர் மண்டபத்தில் இன்று, காலை 7:30 மணி முதல், சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கோவிலுக்குள், சுவாமி தரிசனம் செய்ய, பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவிநாசியில் மாற்றம்: கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவில்லை என, கோவில் தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, பஞ்சாங்கத்தை குறிப்பிடுகின்றனர். திருக்கணிதம் அல்லது வாக்ய பஞ்சாங்கப்படி, விஷேசங்களை, கோவிலில் நடத்துவது வழக்கம். கடந்த முறை, குரு பெயர்ச்சியின் போது, ஒரு பஞ்சாங்கப்படி என்று சொன்ன நிர்வாகம், இந்த முறை, பஞ்சாங்கத்தை மாற்றி, குரு பெயர்ச்சியையும் மாற்றி உள்ளதாக, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.