தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு
தேவிபட்டினம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவிபட்டினத்தில் நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளதாலும், ராமபிரான் வழிபட்டதாலும், நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு திருமண தடை, குழந்தை பாக்கியம், தர்பணம், பிதுர்கடன் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் பரிகாரங்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி,தை அமாவாசை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று(ஆக.,2) ஆடி அமாவாசை என்பதால் நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காத வகையில், பக்தர்கள் வரிசையாக சென்று நீராடும் வகையில் மரக்கட்டைகள் மூலம் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் பாதுகாப்பிற்காக கேமராக்கள் அமைக்கப்பட்டு, ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நவபாஷாண பகுதியை துாய்மையாக வைத்திருக்கவும் அறிவிக்கின்றனர். இந்து அறநிலையத்துறை தக்கார் இளங்கோவன் தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.