விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பெரிய விநாயகர் சிலைகளை நகரின் பல்வேறு இடங்களில் வைத்து, தினசரி பூஜை செய்து, பின் நீர் நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்வர்.
இந்தாண்டு வரும் செப்டம்பர், 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், பழைய தர்மபுரி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஜய் என்பவர் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூல் மற்றும் வாட்டர் கலர் கொண்டு பல்வேறு வண்ணங்கள், உருவங்களில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். தற்போது, விநாயகர் சதுர்த்தி விழா கிராமங்களிலும் சிலை வைத்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால், பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, 2 ஆயிரம் ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை, மூன்று அடி முதல், 12 அடி உயரம் வரை, பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைகளை செய்து தருகிறோம். இவ்வாறு கூறினார்.