சென்னை கோவில்களில் பக்தர்கள் அலை!
சென்னை: குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என மூன்று நிகழ்வுகளும் நேற்று ஒன்றாக வந்ததால் சென்னையில் கோவில்கள், குளக்கரை, கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. குரு பெயர்ச்சி நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குரு பெயர்ச்சி. குரு பகவான், நேற்று காலை சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு, சென்னை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், குருவுக்கு தனி சன்னிதி உள்ள கோவில்களில் பக்தர்கள் அலைகடலாகத் திரண்டனர். குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக, சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்ததால், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஜென்ம ராசிகளுக்கு பல கோவில்களில் சங்கல்பம் செய்து வைக்கப்பட்டது.
ஆடி அமாவாசை: அமாவாசை திதி, இறந்த முன்னோர் வழி பாட்டுக்கு மிகவும் ஏற்றது. இறந்தவர்களின் திதி நாளில் திவசம் செய்தாலும், மாதந்தோறும் அமாவாசையன்று, தர்ப்பணம் செய்வதும் வழக்கத்தில் உள்ளது. இந்த நாட்களில் திதி கொடுக்க மறந்தோர், சூரியன், சந்திரனுக்குரிய கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதத்தில், இரண்டு கிரகங்கள் சேரும் ஆடி அமாவாசை நாளில் திதி கொடுப்பர். ஆடி அமாவாசையான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் குளங்கள், கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர். கோவில்களில் வழிபாடு செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானமும் செய்தனர். மயிலை கபாலீசுவரர் கோவில், சைதாப்பேட்டை காரணீசுவரர், வேளச்சேரி தண்டீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில் குளங்களில் திதி கொடுத்து, கோவில்களில் தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு: ஆடிப் பெருக்கான நேற்று சென்னை வாசிகள் குளக்கரை, கடற்கரையில் பூஜித்து படையலிட்டு, நோன்புக்கயிறு கட்டிக்கொண்டனர். வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி கடலில் விட்டனர். மணமாகாத பெண்கள், கழுத்தில் மஞ்சள் நூல் கட்டிக் கொண்டனர். வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த கலவை சாதங்களை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். - நமது நிருபர் -