உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கோவில்களில் அருள்வாக்கு கேட்க குவியும் மக்கள்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கோவில்களில் அருள்வாக்கு கேட்க குவியும் மக்கள்!

பனமரத்துப்பட்டி:"உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால், பதவி கிடைக்குமா? என, கோவில்களில் அருள் வாக்குக் கேட்க மக்கள் குவிந்து வருகின்றனர். சேலம், பனமரத்துப்பட்டி அடுத்துள்ள, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில், மல்லூர் அருகே அல்லேரி முனியப்பன் கோவில்களில், பல கலரில் உள்ள பூக்களை, பேப்பரில் பொட்டலமாக கட்டி, சுவாமி முன் போட்டு, சிறுவர், சிறுமியை எடுக்கச் சொல்லி, அதில் வரும் பூவின் வண்ணத்தை வைத்து, தேர்தல் வெற்றி, தோல்வியை தெரிந்து கொள்கின்றனர்.மல்லூர் அருகே, கள்ளமலை பெருமாள் கோவிலில், சனிக்கிழமைகளில், பூப்பந்து சுவாமி தலை மீது வைக்கப்படுகிறது. பூப்பந்து எந்தப் பக்கம் சரிந்து விழுகிறது என்பதை வைத்து, பூசாரி ரமேஷ் அருள் வாக்கு கூறுகிறார். சுவாமியே இல்லை என, பிரசாரம் செய்யும் அரசியல் கட்சியைச் சேர்ந்தோரும், தேர்தல் குறித்து அருள் வாக்கு கேட்க, கோவில்களுக்குப் படையெடுக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற வைத்தால், ஆட்டுக் கிடா, கோழி பலியிடுவதாகவும் சுவாமியிடம் வேண்டுகோள் வைக்கின்றனர். அருள் வாக்கு கேட்டு சேலம், ராசிபுரம், மல்லூர், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களில், மக்கள் குவிந்து வருகின்றனர்.அல்லேரி முனியப்பன் கோவில் பூசாரி கண்ணுசாமி கூறியதாவது: திருமணம், குழந்தைப் பாக்கியம், சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக, பூ வாக்கு கேட்பது வழக்கம். கடந்த ஒரு மாதமாக, தேர்தலில் நிற்கலாமா, நின்றால் வெற்றி கிடைக்குமா என, வாக்கு கேட்க நிறையப் பேர் வருகின்றனர். வெற்றி பெற்றால் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்வதாக, வேண்டுகோள் வைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு பூசாரி கண்ணுசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !