கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா கோலாகலம்
சேலம்: ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை கடந்த மாதம், 27 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஆடிப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, நேற்று கம்பம் நடும் விழா நடந்தது. இரவு, 8.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட கம்பத்துக்கு, அம்மன் கருவறைக்கு பின்னால் சிறப்பு அபிஷேம், பூஜைகள் செய்யப்பட்டன. மேளதாளம் முழங்க, பூசாரிகள் கம்பத்தை சுமந்தபடி கோவில் உட்பிரகாரம், கொடிமரம் என மூன்று முறை வலம் வந்து, பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சூலத்திற்கு அருகே கம்பத்தை நட்டனர். பக்தர்கள் மலர்கள் தூவி கம்பத்தை வழிபட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு, 9 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உள்ளூர் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கம்பம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.