பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை, செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு மற்றும் சாட்டையடி திருவிழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவிலில், ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடப்பது வழக்கம். குரும்பர் இன மக்கள் சார்பில், இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, ஆடி திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை, சர்வ அலங்காரத்தில் வீரலட்சுமி அம்மன், நான்கு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்கள், நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வரிசையாக பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, பூசாரி, பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். இதேபோன்று பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், பூசாரியிடம் இருந்து சாட்டையடிகளை பெற்று கொண்டனர். இதுபோன்ற வினோத வழிபாடு, 100 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், தலையில் தேங்காய் உடைக்கும் போதும், சாட்டையடி வாங்கும் போதும் ஒரு பக்தருக்கு கூட, இதுவரை ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.