உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இம்மாதம் இரண்டு கருட சேவை

திருமலையில் இம்மாதம் இரண்டு கருட சேவை

திருப்பதி: திருமலையில், இம்மாதம் இரண்டு கருட சேவை நடக்க உள்ளது. திருமலையில், புரட்டாசி மாதம் நடக்கும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது, கருடசேவை நடந்து வருகிறது. இதை காண பக்தர்கள் திரள்வர். அன்றைய தினம், நேரில் காண முடியாத பக்தர்களுக்காக, பவுர்ணமி இரவு, 7:00 மணிக்கு, கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆக., 7ல், கருட பஞ்சமி; ஆக., 18ல் ஆடி பவுர்ணமி என, இந்த மாதம், இரண்டு கருட சேவைகளை நடத்த உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

பவித்ரோற்சவம் : திருமலையில் நடக்கும் உற்சவங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், திருமலை கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், பக்தர்களால் ஏற்படும் தோஷங்களை விலக்கவும், தேவஸ்தானம் ஆண்டுதோறும், ஆடி மாதம் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை, திருமலையில் பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. அன்றைய தினங்களில், வி.ஐ.பி., பிரேக் உள்ளிட்ட, ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

18 லட்சம் காலண்டர்கள் : திருமலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், அறங்காவலர் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பின், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஏழுமலையான் புகைப்படம் உள்ள, 12 பக்கங்கள் உடைய, 2017ம் ஆண்டின் காலண்டர், 18 லட்சம் பிரதிகள், தேவஸ்தான அச்சகத்தில் அச்சிடப்பட உள்ளது. தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேவஸ்தான தங்கும் விடுதியில் இலவச உணவு வழங்கப்படும். திருமலையில், தேவஸ்தான இடங்களில் செயல்பட்டு வரும், அஞ்சலகம், மடங்களின் உரிமமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.4.24 கோடி வசூல் : திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை சமர்ப்பிக்கின்றனர். அதை, தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது. பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும் போதும், அதிகளவில் உண்டியல் வருவாய் கிடைக்கிறது. ஆக., 1ல், 4.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

புதிய ஸ்டுடியோ : திருமலை - திருப்பதி தேவஸ்தானம், இந்து சனாதன தர்மத்தை பரப்ப, ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ற ஆன்மிக, டிவி சேனலை துவக்கியது. இதன் ஸ்டுடியோ, திருப்பதி அலிபிரியில் உள்ள, பூதேவி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய ஆன்மிக நிகழ்ச்சிகளை, தேவஸ்தானம் ஒளிபரப்பி வருவதால், ஸ்டுடியோவை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருப்பதி அலிபிரி மாதிரி கோவில் அருகில், 14.50 கோடி ரூபாய் செலவில், நவீன ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !