உலக அமைதிக்காக 1,000 பேர் உண்ணாவிரதம்
சென்னை: உலக அமைதி, உணவு பற்றாக்குறையைப் போக்குவது போன்ற நோக்கங்களுக்காகவும், ஜெயின் சமூகத்தின் மதகுருவான ஆனந்த் ரிஷிஜி மகராஜின், 117வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். சென்னையில், ஏ.எம்.கே.எம்., ஜெயின் சதுர்மாஸ் சமிதி சார்பில் ஜெயின் துறவிகள், அச்சமூகத்தை சேர்ந்த பலர், 30 நாட்கள் மற்றும் 15 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த, 650 பெண்கள் உள்ளிட்ட, 1,000 பேர், கடந்த, எட்டு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த நாட்களில், இவர்கள் வெறும் வெந்நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருப்பர். உண்ணாவிரதத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ஜெயின் மதகுரு பிரவீன் ரிஷி மகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருளாசி வழங்கினார். இந்த உண்ணாவிரதத்தில் மதுராந்தகம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த, 28 தொழுநோயாளிகளும் பங்கேற்று, ஜெயின் மதகுருவின் ஆசி பெற்றனர். இந்த உண்ணாவிரத நிகழ்வு, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.