திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளும் நவராத்திரி நாயகி
தக்கலை : நவராத்திரி நாயகி சரஸ்வதிதேவி நாளை மறுநாள்(24ம் தேதி) பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கு கொள்வதற்காக நவராத்திரி நாயகி சரஸ்வதி தேவியின் விக்ரகம் பத்மனாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாரம்பரிய நிகழ்ச்சி நாளை மறுதினம் நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களால் பத்மனாபபுரம் அரண்மனையில் கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி விழா 1840ல் சுவாதி திருநாள் மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதுவரை சமஸ்தானத்தின் தலைநகர் பத்மனாபபுரமாக இருந்ததால் மன்னர் மற்றும் குடும்பத்தினர் பத்மனாபபுரம் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். அப்போது இவ்விழா பத்மனாபபுரம் அரண்மனையில் வைத்து நடந்து வந்தது. தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட போது மன்னர் மற்றும் குடும்பத்தினர் திருவனந்தபுரம் சென்றதால் இவ்விழா பத்மனாபசுவாமி கோயில் நவராத்திரி மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. இவ்விழாவின் கதாநாயகியான சரஸ்வதிதேவியின் விக்ரகமானது பத்மனாபபுரம் அரண்மனையில் சிறிது காலம் அரசவை கவிஞராக இருந்த கவி சக்கரவர்த்தி கம்பர் வழிபட்டதாகும். அப்போது மன்னராக இருந்த மார்த்தாண்டவர்மா அரண்மனை வளாகத்தில் கோயில் கட்டி சரஸ்வதி விக்ரகத்தை வைத்து பூஜித்து வந்தார். இவரின் காலத்திற்கு பிறகு தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பின் இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து வரும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் இருந்து சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. சரஸ்வதிதேவிக்கு பக்கதுணையாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன் விக்ரகங்களும் செல்கின்றன. இந்நிகழ்ச்சி இந்தாண்டு நாளை மறுதினம் நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி விக்ரகங்களுக்கு முன் கொண்டு செல்லப்படும் மன்னர் பயன்படுத்திய உடைவாளை அரண்மனை உப்பரிகை மாளிகையில் இருந்து எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழக தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கேரள மாநில அதிகாரிகள் ஒப்படைக்கும் இந்நிகழ்ச்சிக்கு பின் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன் பிறகு சுவாமி விக்ரகம் எடுத்துவரப்பட்டு நெற்றிபட்டம் கட்டிய யானை மீது அமர்த்தி ஊர்வலமாக பத்மனாபபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்கின்றனர். சரஸ்வதி விக்ரகத்தோடு குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பல்லக்கில் கொண்டு செல்லப்படுகின்றன. அரண்மனை நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, வலியகாணிக்கை வழங்கப்படுகிறது. பின்னர் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளரிஏலா, மேட்டுக்கடை, கேரளபுரம், திருவிதாங்கோடு, அழகியமண்டபம், சுவாமியார்மடம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை சென்றடைகிறது. அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள்(25ம் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்று இரவு தங்கிவிட்டு அடுத்தநாள்(26ம் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகிறது. தமிழக சுவாமிகளுக்கு மாநில எல்லை களியக்காவிளையில் கேரள அரசு சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு பக்கதுணையாக செல்லும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகம் நாளை(23ம் தேதி) அங்கிருந்து பத்மனாபபுரம் கொண்டு வரப்படுகிறது. இதுபோல் வேளிமலை முருகன் விக்ரகம் நாளை மறுதினம் அதிகாலை அங்கிருந்து பத்மனாபபுரம் கொண்டு வரப்படுகிறது.