சீயாத்தம்மன் கோவிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்
கொரட்டூர்: பிரசித்தி பெற்ற சீயாத்தம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் மீது, மிளகாய் கரைசல் அபிஷேகம் நடந்தது. கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், 10 நாள் ஆடி பிரம்மோற்சவ திருவிழா, கோவிலை சுற்றியுள்ள கொரட்டூர், அக்ரஹாரம், மாதனங்குப்பம், தானங்குப்பம், தட்சினாங்குப்பம், கடுக்கு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களால், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை, 10:00 மணிக்கு, 1,001 பெண்கள் பால்குடம் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, யானை, குதிரை, சிங்கம் உள்ளிட்ட, 11 வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. பின், 12 பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர். மதியம், 2:00 மணியளவில், ஆறு பக்தர்கள் உடலில் மஞ்சள், திருநீர், சந்தனம், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், சீயக்காய் அபிஷேகம் நடந்தது. கடைசியாக மிளகாய் துாள் கரைசலை உடலில் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இறுதியாக, நேற்று இரவு தீமிதி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அம்மன் அருளை பெற்றனர்.