செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. பாகூர் அடுத்துள்ள சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு நேரங்களில் சிங்கம், காமதேனு, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் செடல் போட்டுக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. அமைச்சர் கந்தசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மாட வீதிகளில் வலம் வந்த தேர், இரவு 8.30 மணிக்கு, நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் மஞ்சினி, துணைத் தலைவர் சம்பத், செயலாளர் ராமதாஸ், பொருளாளர் ஸ்ரீநிவாசன், உறுப்பினர் சந்திரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.