உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருட்டப்பள்ளியில் 27ம் தேதி நவராத்திரி விழா

சுருட்டப்பள்ளியில் 27ம் தேதி நவராத்திரி விழா

ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், இம்மாதம் 27ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உலகில் இதுபோன்று காட்சி எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை மரகதாம்பிகை, இக்கோவிலில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா, புரட்டாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வரும் 27ம் தேதி, 10 நாள் நவராத்திரி விழா துவங்குகிறது. முதல் நாளன்று மாலை 4 மணிக்கு உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காமாட்சி, மீனாட்சி, ஆண்டாள், மகாலட்சுமி, துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 3ம் தேதி சிவலிங்க பூஜை, மறுநாள் அம்பாள் சயன கோலத்திலும், 5ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 6ம் தேதி வியாழக்கிழமை மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில், அன்னை மரகதாம்பிகைக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவ மூர்த்தி புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெறும். விழா நிகழ்ச்சியை ஒட்டி பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை, கோவில் அறங்காவல் குழுத் தலைவர் முனிசேகர் ரெட்டி மற்றும் மேலாளர் முனிகிருஷ்ணய்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !