களை கட்டுகிறது மைசூரு தசரா விழா: முதல் கட்ட யானைகள் 21ல் புறப்பாடு
மைசூரு: இந்தாண்டு அக்டோபர், 1ம் தேதி ஆரம்பமாகும் தசரா விழாவுக்காக, முதல்கட்ட யானைகள், இம்மாதம், 21ம் தேதி மைசூரு வருகின்றன. மைசூரு மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் நடந்த தசரா ஆலோசனை கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் அமைச்சர் மகா தேவப்பா கூறியதாவது: இந்தாண்டு தசரா விழாவை சாதாரணமாக இல்லாமலும், ஆடம்பரமாக இல்லாமலும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி, மன்னர்கள் நடத்தி வந்த சம்பிரதாயப்படி நடத்தப்படும். இதற்காக, 14.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் சாம்ராஜ்நகர், ஸ்ரீரங்கபட்டணாவிலும் தலா ஒரு கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மைசூரு அரண்மனை மட்டுமின்றி, இதர அரண்மனைகளிலும் தசரா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. தசரா விழாவுக்காக, 18 கமிட்டிகள் உருவாக்கப் பட்டுள்ளன. கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், விவசாயி தசரா, மகளிர் தசரா, இளைஞர் தசரா, திரைப்பட விழா, இந்தாண்டு இரண்டு இடங்களில் உணவு மேளா என, பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரு வதற்காக, அடுத்த வாரத்திலிருந்தே அனைத்து தாலுகாக்களிலும் பிரசாரம் ஆரம்பமாகிறது. இம்முறை சுற்றுலா பயணிகள், முக்கியமானவர்கள் மைசூரு வருவதற்காக, விமான சேவை, ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்த, மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி ஹூன்சூர் தாலுகா, நாகரஹொளே வனப்பகுதியை சேர்ந்த வீரனஹொசஹள்ளி கிராமத்திலிருந்து, தங்க அம்பாரியை சுமக்கும், அர்ஜுனா யானை உட்பட, 6 யானைகள் மைசூரு வர இருக்கின்றன. அன்றைய தினம் இந்த யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மைசூரு அசோகபுரத்திலுள்ள அரண்ய பவன் வளாகத்தில் தங்க வைக்கப்படுகின்றன. இங்கிருந்து, 26ம் தேதி அரண்மனை வளாகத்துக்கு அழைத்து வரப்படுகிறது. அரண்மனை கோட்டை வாயிலில், யானைகளை சம்பிரதாயப்படி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.