கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சுவாமி குரு பூஜை!
உளுந்தூர்பேட்டை: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், குரு பூஜை விழா நடந்தது. திருவெண்ணெய் நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாள், ஆடி சுவாதி மற்றும் குரு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு அறுபத்து மூவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடும், ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிக்கு குரு பூஜையும் நடந்தது. இதில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் விபூதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு அன்னத்தால் லி ங்கம் அமைத்தனர். தொடர்ந்து, பல்வேறு பழ வகைகளால் மகேஸ்வர பூஜை நடந்தது. சுந்தரர் அருட்சபை சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 4:00 மணிக்கு சிவதீர்த்தத்தில் சுந்தரர் முதலை வாயில் இருந்து பிள்ளை எடுக்கும் ஐதீக நிகழ்வு நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும், திருகைலாயம் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.