ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோயில் நடை சாத்தல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளியதால், கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆக.7ல் ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது.
இதனை தொடர்ந்து 17ம் நாள் விழாவை முன்னிட்டு,ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்ததும், காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகி, கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். இதன் பின் கோயில் நடை சாத்தப்பட்டு, கோயிலுக்குள் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதித்தனர். பின் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் அதிகாரிகள் கக்காரின், ராஜாங்கம், அண்ணாதுரை, கமலநாதன் பலர் தரிசனம் செய்தனர்.