அரவிந்தர் பிறந்த நாள் விழா: ஆரோவில்லில் போன் பயர்
புதுச்சேரி: அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, ஆரோவில்லில் வசிப்பவர்கள், போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். உலகில், மனித ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக, ஒரு சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக தத்துவ ஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1967ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நகரம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அரவிந்தரின் பிறந்தநாள், ஆரோவில்லில் நேற்று கொண்டாடப்பட்டது. இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கூடி, போன் பயர் ஏற்றி, தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானம், 6:15 மணிக்கு முடிவடைந்தது. கூட்டு தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.