உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி விநாயகர் சிலைகளுக்கு வட மாநிலங்களில் மவுசு அதிகரிப்பு!

வெள்ளி விநாயகர் சிலைகளுக்கு வட மாநிலங்களில் மவுசு அதிகரிப்பு!

சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வட மாநிலங்களில், வெள்ளி விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. சேலத்தில் இருந்து, ஒரு லட்சம் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 5ல் கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களில், வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது அதிகரித்துள்ளது. பொதுவாக, பெங்களூரு, கோல்கட்டா, சேலம் ஆகிய இடங்களில், அதிக அளவு சிலைகள் வெள்ளியால் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் தயாராகும் வெள்ளி சிலைகளுக்கு, மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளது. இரண்டு மாதங்களில் மட்டும், சேலம், பெங்களூரில் இருந்து, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, மூன்று லட்சம் வெள்ளி சிலைகள் விற்பனைக்கு சென்றுள்ளன; சேலத்தில் இருந்து மட்டும், ஒரு லட்சம் சிலைகள் சென்றுள்ளன. வெள்ளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால், சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, வெள்ளி விநாயகர் சிலைகள், குறைந்த பட்சம், 300 ரூபாய் முதல், அதிகபட்சமாக, மூன்று லட்சம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டன.

சேலம் மாவட்ட தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விசர்ஜனத்துக்கு பயன்படுத்தப்படும் களிமண், பேப்பரால் ஆன சிலைகளே அதிக அளவில் விற்பனையாகும். வெள்ளி விநாயகர் சிலைகளை பொறுத்தவரை, வீட்டின் பூஜை அறைகளுக்கும், பரிசு பொருளாக வழங்குவதும் அதிகரித்துள்ளது. சதுர்த்தி நெருங்கி வருவதால், வெள்ளி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !