ஆவணி அவிட்ட வைபவம்: கோவில்களில் கோலாகலம்!
ஆவணி அவிட்டம் வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பிராமணர்கள், கோவில்களில் புது பூணுால் அணிந்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். உபநயனம் செய்து கொண்ட பிராமணர், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடே, ஆவணி அவிட்டம் என்னும் வைபவம். இது ரிக், யஜூர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள், பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். தந்தை இல்லாதவர்கள், தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின் தாங்கள் அணிந்துள்ள பூணுாலைப் புதுப்பிப்பதோடு, வேதங்களைப் படிக்கவும் துவங்குவர். ஆவணி அவிட்டமான நேற்று, சென்னை திருவல்லிக்கேணி, திருவான்மியூர், நங்கநல்லுார், மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதி கோவில்கள், திருமண மண்டபங்கள், குளக்கரைகளில் ஏராளமான பிராமணர்கள் புதிய பூணுால் அணிந்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதுகுறித்து நங்கநல்லுார், ஹயக்கிரீவர் கோவில் பட்டாச்சாரியார் பார்கவன் கூறியதாவது: நயனம் என்றால் கண். நமக்கு உள்ள இரு நயனங்களுடன் (கண்கள்) மூன்றாவதாக ஞாணக்கண் பெறுவதற்கான சடங்காக, பிராமணர்களால் உபநயனம் செய்யப்படுகிறது. பூணுாலை யக்ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள். சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் துவக்கம் என்பதாகும். வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் இது எனக் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.