திருப்பதி பிரம்மோற்சவ விழா: லட்டு தட்டுப்பாடு வராது!
நகரி : பிரம்மோற்சவ தினங்களில், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்துள்ளோம், என, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்தார். திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும் 29ம் தேதி முதல், அக்., 7ம் தேதி வரை, ஆண்டு பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதுகுறித்து, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறியதாவது: பிரம்மோற்சவ நாட்களில், அதிகாலை சுப்ரபாதசேவைக்குப் பின், தொடர்ந்து நள்ளிரவு வரை, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்தில் முடிகாணிக்கை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வரக்கூடும் என்பதால், லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து வைக்கப்படும். கூடுதலாக, லட்டு கவுன்டர்கள் திறக்கப்படும். அக்., 3ல் நடைபெற உள்ள கருடவாகன சேவையைக் காண, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருமலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து வசதிக்காக திருப்பதி - திருமலை இடையே, மூன்று நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம், இயக்க மாநில சாலை போக்குவரத்துக் கழகம்(ஆர்.டி.சி.,)ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஆறு நிமிடத்திற்கு ஒரு இலவச பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் துரித தரிசனத்திற்காக தொலைதூர தரிசனம் அமல்படுத்தப்பட்டது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தமிழகத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமலையில் குவிந்திருந்தனர். இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.