சேதுக்கரை பெருமாள் கோயில் பாலாலயம் விரைவில் துவக்கம்
கீழக்கரை, :திருப்புல்லாணி அருகே சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த சீனிவாசப்பெருமாள் கோயிலில் திருப்பணி வேலைகள் துவக்க பக்தர்கள் முடிவுசெய்துள்ளனர். பழமைவாய்ந்த இக்கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள், இவருக்கு முன்னால் வணங்கிய நிலையில் அகத்தியர் சிலை உள்ளது. இங்கிருந்து தான் இலங்கைக்கு கடல்மீது பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை சுற்றி கருவேல மரங்கள், புதர்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், சிற்பத்துாண்கள் பராமரிப்பின்றி சிதலமடைந்து உள்ளது. கோயில் கருவறை, அர்த்த மண்டபத்தின் பின்பகுதி இடிந்துவிழுந்துள்ளது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சேதுக்கரை ரெகுநாத பட்டர் கூறுகையில்,“ சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார். காய்ச்சல், தலைவலி தீர இக்கோயிலில் தீர்த்தம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சுதர்சன ஹோமம் செய்யப்பட்டு, கோயிலின் முகப்பில் 80 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஓட்டுக்கட்டடம் அகற்றும் பணி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கவுள்ளது. இதற்கான பாலாலயம் ஆவணி கடைசி வாரத்தில் நடக்கவுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் ஈடுபட்டு உள்ளனர்,” என்றார்.