உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரளா சென்றது நவராத்திரி பவனி: மாவட்ட எல்லையில் மலர் தூவி வரவேற்பு

கேரளா சென்றது நவராத்திரி பவனி: மாவட்ட எல்லையில் மலர் தூவி வரவேற்பு

களியக்காவிளை : நவராத்திரி பவனியில் சுவாமி விக்ரகங்களுக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மலர் தூவி கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்கு பத்மனாபபுரம் சரஸ்வதி தேவி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்உதித்த நங்கை சுவாமி விக்ரகங்கள் பவனியாக செல்வது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழாவிற்காக நேற்று முன்தினம் பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரம் புறப்பட்டது. அன்று இரவு குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியது. நேற்று காலை அங்கிருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி திரித்துவபுரம், படந்தாலுமூடு வழியாக களியக்காவிளை வந்தடைந்தது. களியக்காவிளையில் முளவறக்கோணம் சாஸ்தா சாந்தனம் சேவா சங்கம் சார்பில் 201 இடங்களில் தட்டு பூஜைகள் நடந்தது. வழி நெடுக மலர் தூவி வரவேற்ப அளிக்கப்பட்டது. களியக்காவிளையில் முளவறக்கோணம் சாஸ்தா சாந்தனம் சேவா சங்கம் சார்பில் நடந்த சமய கருத்துரைக்கு அசோக்குமார் தலைமை வகித்தார். சஞ்சனா துவக்கி வைத்தார். சமயவகுப்பு மாணவி வர்ஷா நவராத்திரி சிறப்பு குறித்து பேசினார். களியக்காவிளை ஜங்ஷனில் இருந்து பவனியாக சென்ற சுவாமி விக்ரகங்களுக்கு மாவட்ட எல்லையில் கேரள மாநில போலீசார் பாரம்பரிய உடையுடன் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கேரள மாநில நவராத்திரி விழா கமிட்டியின் நிர்வாகி வேலப்பன் நாயர், ராஜசேகரன் நாயர், அகில இந்திய ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் தென்னலை பாலகிருஷ்ண பிள்ளை, திருவனந்தபுரம் மாவட்ட ஐய்யப்பா சேவா சங்க நிர்வாகி சிவன் குட்டி, குளத்தூர் சுகுமாரன் நாயர், நெய்யாற்றின்கரை தேவசம்போர்டு கமிஷனர் சுரேஷ் குமார், திருவனந்தபுரம் ரூறல் எஸ்.பி., அக்பர், நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி., கோபகுமாரன் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட எல்லையில் குமரி தேவசம் போர்டு கண்காணிப்பாளர் நிர்மல் குமார் மற்றும் ஸ்ரீ காரியம் சுதர்சனகுமார் மன்னரது உடைவாளை கேரள மாநில தேவசம் போர்டு கமிஷனர் வாசுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கேரள மாநில போலீசாரின் அணிவகுப்புடனும், பக்தர்களின் வரவேற்புடனும் சுவாமி விக்ரகங்கள் கேரள சென்றது. இந்த பவனி பாறசாலை, உதியன்குளம்கரை வழியாக நெய்யாற்றின்கரை கிருஷ்ண சுவாமி கோயிலை அடைந்தது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு மாலை திருவனந்தபுரம் சென்றடைகிறது. ஒரு நாள் ஓய்விற்கு பின் சுவாமி விக்ரகங்களுக்கு நவராத்திரி பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !