புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே புனித மிக்கேல் அதிதூதர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் அக்.2ம் தேதி தேர்பவனி நடக்கிறது. கோவில்பட்டி அருகிலுள்ள வடக்கு வண்டானம் கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தேவாலயத்தில் புனித செபஸ்தியார் சப்பரபவனி நடந்தது. இதையடுத்து வண்டானம் பங்குத்தந்தை சகாயதாசன், பாளை ஆயர் இல்ல அருளரசு அடிகளார் ஆகியோர் பவனியாக கொண்டு வந்த திருக்கொடிகளை அர்ச்சித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பக்த கோஷங்களுக்கிடையே கொடியேற்றம் நடந்தது. மேலும் கொடியேற்ற சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதையடுத்து உபதேசியார் மரியதாஸ் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினார். கொடியேற்றத்தை தெ õடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, திருப்பலியுடன் பைபிள் உரையும் நடக்கிறது. மேலும் வரும் 30ம் தேதி புனித சவேரியார் நவநாளன்று கோவில்பட்டி புனித வளனார் தேவாலய அன்டோ அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் அக்.2ம் தேதியன்று பாளை மறைமாவட்ட பொருளாளர் மரியபிரான்சிஸ் அடிகளார் தலைமையில் ஆடம்பர திருப்பலியுடன் புனித மிக்கேல் அதிதூதரின் மின்னொளி தேர்ப்பவனியும் நடக்கிறது. கொடியேற்றத்தில் அச்சங்குளம், தீத்தாம்பட்டி, காமநாயக்கன்பட்டி உட்பட்ட சுற்று வட்டார கிராமத்தினர், கடம்பூர், கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய நகரங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை, ஊர் பெரியோர்கள், ஆசிரியர்கள், அன்பிய குழுக்கள் மைக்கேல் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.