அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம்!
பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆவணிபிரம்மோற்சவ விழா ஆக.,14ல் கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து ஆக.,24 வரை நடக்கிறது. விழா நாட்களில் சப்பரம், பவளக்கால் சப்பரம், அனுமார், கருடன், அன்னம் போன்ற வாகனத்தில், வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் உலாவருவார். நாள்தோறும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, கருத்தரங்கு போன்ற கலைநிகழ்ச்சிகளும் உண்டு. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடந்தது. வரதராஜப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 9 மணிக்கு மேல் கொடியிறக்கும் நிகழ்ச்சியுடன் ஆவணி பிரம்மோற்ச திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் (பொ)மேனகா செய்தனர்.