கோலியனூர் ஜினாலயத்தில் கல்யாண மந்தரவிதானம்
விழுப்புரம்:கோலியனூர் விஜயமதி மாதாஜி பவனில் கல்யாண மந்தர விதானம் நடந்தது.விழுப்புரம் அடுத்த கோலியனூரில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஜயமதி மாதாஜி பவன் (ஜெயினர் கோவில்) உள்ளது. இந்த ஜினாலயத்தில் சாதூர் மாதம் (மழைக்காலத் தங்கல்) விதான மங்கள பெரு விழா நேற்று நடந்தது. ஜெயினத் துறவிகள் மழைக் காலம் துவங்கி முடியும் ஏதேனும் ஒரு பழமை வாய்ந்த கோவில்களில் தங்கி சிறப்பு மங்கள பெருவிழாக்கள் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு மழைக் காலத்தை முன்னிட்டு 108 விஷ்வேஷ்சாகர் இங்கு தங்கியுள்ளார். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்திலுள்ள ஜெயினர் இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கின்றனர்.நேற்று மேல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்ய சுவாமி தலைமையில் கல்யாண மந்தர விதான விழா நடந்தது. இதில் விழுப்புரம் மற்றும் மேல்சித்தமூர் பகுதிகளை சேர்ந்த ஜெயினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர் வாகிகள் அனந்தகுமார், அப்பாண்ட்ராஜ், அனந்தராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர். மேலும் இக்கோவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் நன்கொடையாளர்கள் 94432 49251, 94431 29751 என்ற எண்களில் தொடர்பு கொண்டு நன்கொடைகள் வழங்கலாம் எனவும் ஆலய நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.