ஒருதலைப்பட்சமான அறிக்கை; திருவாங்கூர் அரச குடும்பம் ஆவேசம்!
திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமானதாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, நம்ப முடிய வில்லை என, அரச குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த, 186 கோடி ரூபாய் மதிப்புள்ள, 769 தங்க குடங்கள் காணாமல் போய்விட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில், சமீபத்தில், முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்ய வர்மா கூறியதாவது: ஒருதலைப்பட்சமான இந்த அறிக்கை, மனவேதனையை தருகிறது; அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நம்ப முடியவில்லை. கோவில் நிர்வாகத்திடமோ, அரச குடும்பத்தினரிடமோ, ஆலோசனை செய்திருந்தால், இந்த தவறு நிகழ்ந்திருக்காது. கோவில் சொத்து தொடர்பான கணக்கு, பழங்கால மலையாள எண் முறையிலேயே பராமரிக்கப்படுகிறது; இதை மொழிப்பெயர்க்கும்போது, தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.