உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை தினமும் திறக்கலாமா : முதல்வர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சபரிமலை நடை தினமும் திறக்கலாமா : முதல்வர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சபரிமலை: சபரிமலை நடை தினமும் திறக்க வேண்டும், திருப்பதி போல தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும், என, கேரள முதல்வர் பிணராயி விஜயன் கூறியதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. முதல்வரின் இந்த கருத்துக்களை, ந்திரி கண்டரரு ராஜீவரரு நிராகரித்தார். சபரிமலையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் பிணராயி விஜயன், அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், சபரிமலை நடை தினமும் திறக்க வேண்டும், தரிசனத்துக்கு திருப்பதி போல கட்டணம் வசூலிக்க வேண்டும், என்றார். இதனை அந்த மேடையிலேயே தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் நிராகரித்தார். இதனால் முதல்வருக்கும், தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன், சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாம், என்று கூறினார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு தேவையான விஷயங்களை முடிவு செய்ய வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்று கூறிய அவர், இந்து ஆசாரங்களில் மட்டும் கம்யூனிஸ்ட் தலையிடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் பிணராயி விஜயன் கூறிய ஆலோசனைகளை தந்திரி கண்டரரு ராஜீவரரு நிராகரித்தார். பத்தணந்திட்டையில் அவர் கூறியதாவது: எந்த விஷயத்திலும் யாரும் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்க முடியாது. அரசின் நிலைபாடு ஒரு பக்கம் இருந்தாலும், தேவசபிரஸ்னம் பார்த்து இறைமுடிவு எப்படியோ அதுபடிதான் நடக்க முடியும். தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கோயிலக்கு போகாதவர்கள், சபரிமலையில் பெண்கள் அனுமதி பற்றி பேசுகிறார்கள். சபரிமலைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் பெண்கள், 50 வயது வரை காத்திருக்கலாம்.

தற்போது சபரிமலை பற்றி விவாதம் அதிகமாக வருகிறது. இதில் ஏதாவது சதி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. சபரிமலை சீசன் நேரத்தில் மட்டும்தான் முல்லை பெரியாறு பிரச்னை பெரிதாக எழுப்பப்படுகிறது. எல்லா நாட்களும் தரிசனம் தேவசபிரஸ்னம் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். தந்திரசாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், சிற்பசாஸ்திரம் சேர்ந்ததுதான் கோயில் ஆசாரம். இதில் ஜோதிட சாஸ்திரத்தின் பங்கு அதிகமானது. எல்லாநாளும் தரிசனம் என்பது நீங்களோ, நானோ முடிவு செய்ய முடியாது. கடந்த மூன்று தேவசபிரஸ்னத்தில், தரிசனம் இதுபோலதான் தொடர வேண்டும் என்றும், ஒரு நிமிடம் கூட கூட்ட முடியாது என்று கூறப்பட்டது. இங்கு மண்டல மகர விளக்கு காலத்தில் மட்டுமே பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பணம் வாங்கி கொண்டு தரிசனம் என்பது சபரிமலை மட்டுமல்ல கேரளாவில் எந்த கோயிலிலும் நடைமுறைக்கு சாத்தியமாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் கருத்துக்கு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஆச்சாரங்களுக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். ஆனால் எஸ்.என்.டி.பி. தலைவர் நடேசன், முதல்வரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பக்தர்களிடம் கருத்து கேட்டு இதை நடைமுறை படுத்தலாம். தந்தரிகளின் உயர் அதிகாரம் முடிந்து போன கதை என்று கூறியுள்ளார். இதற்கிடையில் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணனை, தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஐயப்பனின் அவதாரம் என்று நினைக்கிறார், என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த கோபாலகிருஷ்ணன், சபரிமலையில் பணம் உள்ளவர்களையும், பணம் இல்லாதவர்களையும் இரண்டாக பிரித்து பார்ப்பது ஐயப்ப தர்மத்துக்கு எதிரானது. நான் எப்போதும் பக்தர்களுடன் நிற்பேன், என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !