வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா : ஆக.27ல் கொடியேற்றம்
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.,27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றது. கோயில் கருவறையில் மேல் மண்டபம் உள்ள நிலையிலும், சுவாமி மீது பகல் முழுவதும் சூரியக் கதிர்கள் விழுவதால், வெயிலுகந்த விநாயகர், என போற்றப்படுகிறார். ராமபிரான் சீதையை மீட்க செல்லும் முன் இந்த விநாயகரை தரிசித்து இலங்கை சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பத்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆக.,27ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்குகிறது. தினமும் மாலையில் வெள்ளி, கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வருகிறார். எட்டாம் நாள் விழாவான செப்., 3ல் சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தமிழகத்தில் விநாயகருக்கு இரு தேவியருடன் இங்கு மட்டுமே திருமணம் நடக்கிறது. செப்.,4ல் தேரோட்டம் நடைபெறும். 10ம் நாளான செப்.,5ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.