உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலேசியாவுக்கு பறக்கும் தாலிக்கயிறு!

மலேசியாவுக்கு பறக்கும் தாலிக்கயிறு!

உடுமலை: உடுமலை அடுத்த வரதராஜ புரத்தில் தயாரிக்கும் தாலிக்கயிறு, மலேசியா நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான  பணியில், வயது மூப்பு அடைந்தவர்களும், ஆர்வம் காட்டுகின்றனர்.  குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது, வரதராஜபுரம் கிராமம்.  இக்கிராமம், தாலிக்கயிறு மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் பிரசாத கயிறுகள் தயாரிக்கும் பணியை, பிரதானமாகக்  கொண்டுள்ளது.  கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான, பாகு என்று  அழைக்கப்படும் விசைத்தறி கழிவு நுால், சோமனுார் பகுதிகளில் இருந்து, கிலோ ஒன்றுக்கு, 60 ரூபாய் வீதம் பெறப்படுகிறது.

மின் இயந்திரம் மற்றும் கைராட்டினம் கொண்டு தயாரிக்கப்படும் கயிறு, நன்று முறுக்கேற்றப்பட்டு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில்,  நீறமூட்டப்படுகிறது.  பின்னர், நாள் முழுவதும், காய வைக்கப்பபடும் கயிறுகள், கட்டுகளாக கட்டப்படுகிறது.ஒரு கட்டில், 144 கயிறுகள்  இருக்கும்.  ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களுக்கே உரித்தான, முத்திரை அச்சிடப்பட்ட லேபிள்களை ஒட்டி, விற்பனைக்காக, மாநிலம்  முழுவதும் அனுப்பி வைக்கின்றனர்.  மெல்லிய கயிறு, தாலிக்கயிறாகவும், மீடியம் மற்றும் கெட்டி கயிறு, கோவில்களில் வழங்கப்படும்  பிரசாதகயிராகவும்,  மங்கலக் கயிறாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழகத்தின், முக்கிய கோவில்களில் மட்டுமே விற்பனை  செய்யப்பட்டு வந்த தாலிக்கயிறுகள், தற்போது, திருப்பதி, காசி உள்ளிட்ட வெளி மாநில கோவில்களுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது.  அதுமட்டுமின்றி, மலேசியா நாட்டிற்கும், தாலிக்கயிறுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கயிறு தயாரிக்கும் கார்த்திகேயன் கூறுகையில்,  தாலிக்கயிறு தயாரிக்கும் பணியில், எங்கள் கிராமம், மாநில அளவில் சிறந்து விளங்குகிறது.  இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள்,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் மலேசியா நாட்டுக்கும், விற்பனைக்கு அனுப்பி  வைக்கப்படுகிறது.  250 கிராம் அடங்கிய பாக்கெட், 70 ரூபாய்; 450 கிராம் அடங்கிய பாக்கெட், 90 ரூபாய், 1,300 கிராம் பண்டல் பாக்கெட்,  300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !