உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும். விருத்தாசலம், மணவாளநல்லுாரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை, சஷ்டி, பங்குனி உத்திர பெருவிழா விசேஷமாக  நடைபெறும். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், வெளி மாவட்டங்கள், மும்பை, பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும்  ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில், தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி, கோவில் நிர்வாகத்திற்கு கட்டணம் செலுத்தி,  அர்ச்சனை செய்து, பிராது கட்டுவது வழக்கம்.

இங்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் வரை பிராது கட்டுகின்றனர். பிரது கட்ட சீட்டுக்கு 20 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 25  பைசாவும்  வசூலிக்கப்படுகிறது.  சாதாரண குடும்பத்தினர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், உயரதிகாரிகள் வரை பிராது கட்டிச்  செல்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும், மனுவை வாபஸ் பெறுவதுடன், கோவிலுக்கு தங்களால் முடிந்த காணிக்கையை   செலுத்துகின்றனர்.  ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், கோவிலில் போதிய கழிவறை, குடிநீர்,  மொட்டையடிக்கும் கூடம், குளிக்க, உடை மாற்றும் அறை  உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.   அதேபோல், கோவில் வளாகத்தில் பராமரிக்க ப்படும் மயில்கள், மான்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் சமூக ஆர்வலர்கள்  கவலையடைகின்றனர். பக்தர்கள் பிராது சீட்டு கட்டுதல், நேர்த்தி  கடனுக்காக செலுத்தப்படும் ஆடு, கோழிகள்; தானியங்களான முந்திரிகொட்டை, நெல், வேர்க்கடலை உள்ளிட்டவை உண்டியல் காணிக்கை என  பல வழிகளில் வருவாய் வருகிறது.  அதே சமயத்தில் கோவில் வளாகம் முறையாகப் பராமரிப்பின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும்  உள்ளதால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.  எனவே, கோவில் வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி, பூங்காங்கள் அமைக்கவும்,  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !