சேலத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
சேலம்: கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. அம்மாபேட்டை, மிலிட்டரி சாலையில் உள்ள கோவிலில், குருவாயூரப்பன், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாக தொட்டிலில், கண்ணன் சிலை வைத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறுவர்கள், தொட்டில் கண்ணனை, தாலாட்டி மகிழ்ந்தனர். 400க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, கோவிலுக்கு வந்தனர்.
* ஓமலூர், அக்ரஹாரம், வைதீஸ்வர ஆலயத்தில், சத்யநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. சிறப்பு பஜனைக்கு பின், தட்சிணாமூர்த்தி, பைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
* இடைப்பாடி, தாதாபுரம் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிருஷ்ணர் வேடமிட்டும், மாணவியர், ராதை வேடமிட்டும், பள்ளிக்கு வந்திருந்தனர். மேலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சுவாமி, இடைப்பாடி நகரை வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் முன், நேற்று மாலை, உறியடி விழா நடந்தது. அதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
* பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன்புதூர், பெருமாள் கோவில் சுவாமியை, பல்லக்கில் ஊர்வலம் எடுத்துவந்தனர். 17 ஆண்டுகளுக்கு பின், நேற்று, அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 30 அடி உயர பாக்கு மரத்தை, வழுவழுப்பாக சீவி, விளக்கெண்ணெய், கேழ்வரகு தடவி, மர உச்சியில், பணமுடிப்பு, முறுக்கு, பழங்கள், பித்தளை மற்றும் சில்வர் குடம் ஆகிய பொருட்கள் கட்டப்பட்டிருந்தன. அதை பறிக்க, ஏராளமான இளைஞர்கள், மரத்தில் ஏறினர். இதை, சுற்றுவட்டார மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
* ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்து, ஆராதனை நடந்தது. கண்ணன் பாடல்களை, பக்தர்கள் பாடினர். மாலை, 6 மணியளவில், மகா தீபாராதனை நடந்தது. ஆத்தூர், முல்லைவாடி வேணுகோபாலசுவாமி கோவில், வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இன்று மாலை, 5 மணியளவில், உறியடித்தல், குதிரை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.