உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்!

நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்!

நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் நடுக்கடலில் காட்சியளித்த நாளை நினைவுகூ ரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது.

சிவபெருமானின் சோதனையால், மீன் கிடைக்காமல் வறுமையில் வாடிய அதிபத்தர்,  தனது வலையில் சிக்கிய நவரத்தினங்களால் ஆன தங்க மீனை,  வழக்கம்போல சிவபெருமானை நினைத்து, மகிழ்வோடு கடலில் விட்டார். அதிபத்தரின் பக்தியை  மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப  வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி,  காட்சியளித்தார் என்பது புராணம். இதனால், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, போற்றப்படும்  அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வைபவத்தை, நாகை நம்பியார் நகர் மீனவர்கள் ஆண்டுதோறும் வெகு  விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான வைபவத்தை, நாகை நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் நேற்று மதியம் நடத்தினர்.அதையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன்  கோவிலில், இடப வாகனத்தில், தேவியருடன் சிவபெருமான்  எழுந்தருளினார். தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, நாகை புதிய  கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான் மற்றும் அதிபத்த நாயனாரை, ஆரிய நாட்டுத் தெரு கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர்.  அங்கு, சிறப்பு  தீபாராதனை நடந்தது. பின், அதிபத்த நாயனார் படகில்  சென்று,  கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான   பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !