குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பக்தர்களின் ஓம் காளி, ஜெய்காளி கோஷத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 6ம் தேதி மகிஷாசூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்தியாவில் தசரா திருவிழாவில் இரண்டாவது இடம் வகிக்கும் குலசேகரன்பட்டணம் தசரா திருவிழா நேற்று (27ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலாவும், அதனைத் தொட ர்ந்து காலை 8.35 மணிக்கு கொடிபட்டம் கோயிலை வந்தடைந்தது. காலை 8.40 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோயில் பூசாரி ராஜாபட்டர் கொடியேற்றினார். அப்போது பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி, தாயேமுத்தாரம்மா என கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திறகு மஞ்சள், சந்தனம், பலமணப்பொடி, விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், புனிதநீர் ஆகிய அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. கொடியேற்றம் நடந்தவுடன் கோயில் பூசாரி செல்லப்பா பட்டர் பக்தர்களுக்கு காப்பு கயிறு கட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், மாவட்ட பஞ்.,சேர்மன் சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ.,செல்லத்துரை, உடன்குடி ஒன்றிய அதிமுக.,செயலாளர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் சக்திவேல், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன்காடு கண்ணன், கணேசன், ராம்குமார், பிரிமியர் குக்கர் சிவநேசன், உடன்குடி ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சாரதி, மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க துணைத் தலைவர் மரியம் சேர்மத்துரை, பெரியபுரம் வேல்ஆதித்தன், பிரபாகர் முருகராஜ், கார்த்திகேயன், மாவட்ட காங்.,பொதுச் செயலாளர் நடராஜன், உடன்குடி வட்டார காங்.,தலைவர் சிவசுப்பிரமணியன், குலசை சிதம்பரம், கொட்டங்காடு சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழுவினர் சார்பில் அன்னதானமும், உடன்குடி ஒன்றிய தேமுதிக., செயலாளர் நேசபுரம் செல்வகுமார் ஏற்பாட்டில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.30 மணிக்கு அம்மன் துர்க்கை திருக்கோலத்தில் பவனியும், காலை முதல் இரவு வரை சமய சொற்பொழிவும் நடந்தது. இன்று 28ம் தேதி முதல் வரும்5ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு கலைநிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தினசரி ஒவ்வொரு திருக்கோலத்தில் தெருபவனியும் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 6 மணி, 8மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10.30 மணிக்கு மகாஅபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிவார்கள். இதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் பவனியும், மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.