உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பூஜை கட்டணங்களை உயர்த்த முடிவு

கோவில் பூஜை கட்டணங்களை உயர்த்த முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில், பூஜை நேரத்தில் சுவாமியை தரிசிக்க சிறப்பு கட்டணம் நிர்ணயிக்க எடுக்கப்பட்ட முடிவை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ரத்து செய்துள்ளது. ஆனால், தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து, பூஜை கட்டணங்கள் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், பூஜை நேரங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற புதிய கட்டணத்தை தேவஸ்வம் போர்டு அறிமுகம் செய்தது. அதற்கு பல்வேறு சங்கங்களும், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி அத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில், வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து, புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டணம் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்): அர்ச்சனை ரூ.10 (ரூ.7), கணபதி ஹோமம் ரூ.40 (ரூ.25), ரத்த புஷ்பாஞ்சலி ரூ.25 (ரூ.15), துலாபாரம் ரூ.45 (ரூ.40), மிருத்யுஞ்ச ஹோமம் ரூ.70 (ரூ.45), சகஸ்ரநாம அர்ச்சனை ரூ.20 (ரூ.13), களபாபிஷேகம் ரூ.450 (ரூ.300), சர்க்கரைப் பொங்கல் ரூ.30 (ரூ.20), பால் பாயாசம் ரூ.25 (ரூ.15), அரவணை ரூ.45 (ரூ.30) என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு செயலர் பி.ஆர். அனிதா தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில், பூஜை மற்றும் பிரசாத கட்டணங்கள் வரும் அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இக்கோவிலில் புதிய கட்டணங்கள் விவரம் வருமாறு: அரவணை பிரசாதம் ரூ.60 (ரூ.50), அப்பம் ரூ.25 (ரூ.20), படி பூஜை ரூ.40 ஆயிரம் (ரூ.30 ஆயிரம்), உதயாஸ்தமன பூஜை ரூ.25 ஆயிரம் (ரூ.20 ஆயிரம்) ஆகவும் இருக்கும்.இப்புதிய கட்டண உயர்வுகள், கேரள மாநில ஐகோர்ட் உத்தரவுபடியே அமலுக்கு வரும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு செயல் அலுவலர் என்.சதீஷ்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !