விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
ஈரோடு: ஈரோடு மற்றும் மாவட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவிலுக்கு மக்கள் படையெடுத்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை, மக்கள் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், ஈரோடு மாவட்டம் முழுவதும், 1008 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் சம்பத் நகர், கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், ஈஸ்வரன் கோவில் வீதி, வெட்டுக்காட்டு வலசு, திண்டல், பி.பெ., அக்ரஹாரம் கே.கே., நகர், சாஸ்திரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு அடி முதல், 11 அடி வரை 208 சிலைகள் அதிகாலையில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. ஈரோடு முனிசிபல் காலனி சாலையில், சக்தி விநாயகர் கோவிலில் தங்ககவச சாத்துபடி, தீபாராதனை நடந்தது. சதுர்த்தியை ஒட்டி நால்ரோடு ராஜகணபதி சந்தனகாப்பு அலங்காரத்திலும், மாநகராட்சி கணபதி கோவில் விநாயகர் வெள்ளி கவச அங்காரத்திலும், மோளக்கவுண்டன்பாளையம் சித்தி விநாயகர் பலூன் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு படையெடுக்க தொடங்கினர். விநாயகருக்கு பிடித்த கோமேதகம், பால் கொழுக்கட்டை, பருப்பு கொழுக்கட்டை, வெல்ல கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சிறு விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக இருந்தது.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சத்தியமங்கலத்தில், 150 சிலைகள், தாளவாடியில், 26, ஆசனூர் மற்றும் கடம்பூரில் தலா ஐந்து சிலைகள் என மொத்தம், 189 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலை கரைப்பு ஊர்வலம் நாளை நடக்கிறது.
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அரசமரத்து விநாயகர், சிங்கார வீதி கெட்டி விநாயகர், தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி சக்தி விநாயகர், பூக்கடைப்பகுதி வெற்றி விநாயகர் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன.கோபி: கோபி வேலுமணி நகர், சக்தி விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கொலுக்கட்டை, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர்.
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகரம் மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதிகளில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், 9ம் தேதி டானப்புதூரிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பகுடுதுறை-பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது.