கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
கரூர்: பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு, விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, க.பரமத்தி உள்பட, 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிங்கமுக விநாயகர், லட்சுமி விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலைக்கு கொலு கட்டை வைத்தும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மஹாமூர்த்தி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.