விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் விசர்ஜனத்துக்கு 450 சிலைகள் தயார்
ஊட்டி: நீலகிரியில், விநாயகர் சதுர்த்தி விழா, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன; விநாயகர் சிலைகள் விசர்ஜன விழாவை விமரிசையாக நடத்த இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதையொட்டி, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடிமட்டம் உட்பட ஒன்றிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
விஷ்வ இந்து பரிஷத்: தமிழகம், இந்து சேவா சங்கம் உட்பட அமைப்புகள் சார்பிலும், 70 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுக்க, 450க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்து அமைப்புகள் தவிர, ஆங்காங்கே உள்ள பொதுமக்கள், பக்தர்கள் சார்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஊட்டியில், வரும், 8ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. 8ம் தேதி கோத்தகிரி, 9ம் தேதி, கூடலுார், 11ம் தேதி, பந்தலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை குன்னுாரில், லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டியில் காமராஜர் சாகர் அணை, கூடலுாரில் இரும்பு பாலம் ஆறு மற்றும் குனியல் ஆறு, பந்தலுாரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
* குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில், மாடல் ஹவுஸ் செல்வகணபதி கோவில், பெட்போர்டு கணபதி கோவில் உட்படவிநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அர்ச்சனை, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. ஜெகதளா சித்தி விநாயகர் கோவிலில் நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா ஆகியவை நடந்தன. மேலும், ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுநடத்தப்பட்டது.