காஞ்சிபுரத்தில் ஒன்பது கோவில்களில் வண்ண மின் விளக்குகள் ஜொலிக்கும்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதியை மேம்படுத்தும் வகையில், முக்கிய ஒன்பது கோவில் கோபுரங்கள் இரவில் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க உள்ளன. மேலும், சுற்றுலா பயணி களின் வாகனங்கள் நிறுத்த தனி இடம், இலவச இணையதள தொடர்புக்கு, வை-பை வதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, சுற்றுலா துறை கண்காணிப்பில் நகராட்சி மற்றும் அறநிலையத் துறை மூலம், 16.47 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளன. காஞ்சிபுரம் நகரில் ஏராளமான கோவில்கள் உள்ளன. சுவாமி தரிசனம் செய்ய, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதியை மேம்படுத்த, கடந்த ஆண்டு மத்திய அரசு, பிரசாத் திட்டத்தை அறிவித்தது. அதில் காஞ்சிபுரம் நகரில் உள்ள முக்கிய கோவில்களில் உலக தரம் வாய்ந்த வண்ண விளக்குகள் பொருத்தி, இரவில் ஜொலிக்க வைக்க திட்டமிடப்பட்டது. இந்த மின் விளக்குகள் பல வண்ணங்களில் நிறம் மாறி, மாறி மிளிரும்; சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும்.
பிரசாத் திட்டத்திற்கு தொழில் ரீதியாக ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. அது, மாநில அரசு மூலம், மத்திய அரசுக்கு அனுப்பி, அனுமதி கிடைத்தவுடன் டிசம்பர் மாதத்திற்குள் பணி துவங்கும்.
அ.முஜிபுர் ரஹ்மான் நகராட்சி ஆணையர் காஞ்சிபுரம்
வை-பையும் வருகிறது: சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பயன் பாட்டிற்கு, வை-பை வசதியும் ஒன்பது இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது. ஏகாம்பர நாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு அறை, தகவல் மையம் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நிழற்குடையுடன் கூடிய பாதை அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
ரங்கசாமி குளம் சீரமைப்பு பணிகள்: நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ரங்கசாமி குளத்தின் சுற்று பகுதிகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த திட்டத்தில் நிதி ஒதுக்கி பணிகள் நடக்க உள்ளன.
நடைபாதை சீரமைப்பு 4.2 (ரூ. லட்சத்தில்)
தடுப்பு கம்பி அமைத்தல் 6.6
மின் விளக்குகள் 1.66
பணிகள் நடக்கவுள்ள கோவில்கள் (ரூ.லட்சத்தில்)
சுரகரேஸ்வரர் கோவில் 51.92
கைலாச நாதர் கோவில் 51.92
வைகுண்ட பெருமாள் கோவில் 63.32
ஏகாம்பரநாதர் கோவில் 99
வரதராஜப் பெருமாள் கோவில் 199.92
உலகளந்த பெருமாள் கோவில் 55.84
கச்சபேஸ்வரர் கோவில் 68.16
காமாட்சி அம்மன் கோவில் 89.36
குமர கோட்டம் முருகன் கோவில் 55.44